Header Adsஉலகத்துக்கே ஊடகத்தைக் காட்டிய முஸ்லிம்கள் அதே ஊடகத்தால் ஓரங்கட்டப்படுகின்றனர்...உண்மையில் ஊடகத்துக்கு அடித்தளம் கொடுத்த மார்க்கம் இஸ்லாம். ஊடகம் எப்படி அமைய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம். ஊடகத்தின் விதிமுறைகளைச் சொல்லிக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம். வேறு எந்த ஒரு மார்க்கத்துக்கும் உரிமை கொண்டாட முடியாத அளவுக்கு இஸ்லாத்துக்கும் ஊடகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார நிலையத்தின் பணிப்பாளரான நௌபர் மௌலவி தெரிவித்தார்.


சியன ஊடக வட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து நடாத்திய ‘மாற்றத்தை நோக்கிய ஊடகப்பயணம்’ என்ற தொனிப்பொருளிலான ஊடகக் கருத்தரங்கு கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட அல் - பத்ரியா மகாவித்தியாலத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


சியன ஊடக வட்டத் தலைவரும் வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான எம்.இஸட். அஹ்மத் முனவ்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது,
ஊடகம் இன்று உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. எந்தவொரு நாட்டின் தலைவரையோ, அரசாங்கத்தையோ தெரிவு செய்வதாக இருந்தாலும் அதன் முக்கியமான ஒரு பகுதி ஊடகமாக இருக்கின்றது. உலகத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டுமோ அவற்றை இந்த ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.


அறியாமையிலிருந்த ஜாஹிலிய்யா கால உலகத்துக்கு ஊடகத்தைக் காட்டி கண் திறக்க வைத்த சமூகம் எம் முஸ்லிம் சமூகம். ஆனால் இன்று அதே ஊடகத்தின் மூலம் நாம் ஒதுக்கப்பட்டு, ஓரங்கப்பட்டு இருக்கின்றோம்.


உண்மையைத் தெளிவாக முன்வைக்கும் போது சவால்களை எதிர்நோக்கியே ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முதலாவது செய்தியை எதிர்த்தவர் நபிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்த தனது சாச்சா அபூதாலிப் என்ற சோக உணர்வோடு நபிகளார் இருந்தவேளை, ஊடகத்துக்கே முன்மாதிரியாகத் திகழும் ஜிப்ரில்(அலை) அவர்கள் “உனக்கு சவால்கள் வரலாம். ஆனால் உன்னோடு இறைவன் இருக்கின்றான்” என்ற செய்தியைக் கொண்டு வந்தார்கள். 


இவ்வாறு இறைவனிடம் இருந்து கொண்டுவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்வதற்காக இந்தப் ஊடகப்பணி பயன்படுத்தப்பட்டது.
அன்று நபிகள் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு செய்தியைச் சொல்லுவதற்கும் செய்தியைச் சேகரிப்பதற்கும் நபிகளாருடன் தொடர்பாடல் வைத்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவரை அனுப்பினார்கள் என்றால் அன்றைய தூர நோக்கும் சிந்தனையும் எப்படி அமைந்திருந்தது என்பதனைப் பாருங்கள்.


மதீனாவின் ஊடகத்துறை அங்கு சென்ற போது, அது வித்தியாசமான, விசாலமான முறையில் அதனை கையாண்டார்கள்.
அங்கு மஸ்ஜிதை அமைத்து அதனை ஒன்று கூடும் இடமாக மாற்றினார்கள். ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒவ்வொரு ஊரினதும் ஆண்கள் வயது வந்தவர்கள் ஓர் இடத்திலே ஒன்று சேர்வதற்காக ஐந்து நேரத் தொழுகை கடமையாக்கப்பட்டது.


அந்தத் தொழுகையை மாத்திரம் இன்றைய முஸ்லிம்கள் சரியாக ஊடக சிந்தனையோடு சிந்திப்பார்களாக இருந்தால் ஐந்து நேரத் தொழுகைக்கு பிறகு முஸ்லிம் சமூகத்துக்கு உன்னதமான செய்திகளைச் சொல்ல முடியும் என்பதனையும் நாங்கள் இன்று மறந்து விட்டோம்.


எங்களுடைய மஸ்ஜிதுகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஏதோ ஒரு செய்தியைச் சுமந்து செல்லும் ஓர் உயர்ந்த மத்திய நிலையமாக மஸ்ஜிதுகள்(பள்ளிவாசல்கள்) மாற வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் சஹாபாக்களுக்கு இறங்கப்பட்ட குர்ஆன் வசனங்களைத் தெளிவுபடுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துச் சொன்னார்கள். யூதர்கள், சிலை வணங்கிகள், முனாபிக்குகள் விடயத்தில் நாங்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அன்று ஆலோசனை வழங்கினார்கள். எனவே ஐந்து நேரத் தொழுகை எமக்கு உன்னதமான ஒரு சந்தர்ப்பமாகும்.


ஓர் ஊரின் சிந்தனையாளர்கள், பொறுப்புவாய்ந்தவர்கள், உயர் மட்டத்தினர், குடும்பத்தலைவர்கள், படித்தவர்க்கத்தினர், வாலிபக் கூட்டத்தினர் , உலமாக் கூட்டத்தினர் ஒரு நாளைக்கு ஐந்து தடவை ஒன்று சேர்கின்றார்கள் என்றால் எங்களுக்கு எத்தனை திட்டமிடல்களைச் செய்ய முடியும். இதனை நபி (ஸல்) அவர்கள் அன்று மதீனாவிலே நடத்திக் காட்டினார்கள். அதற்குப் பிறகு வெள்ளிக்கிழமை வந்தால் மிம்பர் அமைத்து, மேடை அமைத்து உபதேசம் புரிந்து தமது ஊடகத்தை ஒரு கிராமத்துக்கு மாத்திரமல்ல, அந்தப் பகுதிக்கே விரிவடையச் செய்தார்கள். இந்த உன்னதமான ஒரு வழிமுறையை வேறு எந்த ஒரு மார்க்கத்திலும் காண முடியாது. அந்த அளவுக்கு ஊடகத்தைப் பயன்படுத்தி இருக்கிறது எமது மார்க்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவரும் நவமணிப் பத்திரிகை ஆசிரியருமான, என்.எம். அமீன், எங்கள் தேசம் ஆசிரியர், அஷ்ஷெய்க் ஜெம்ஸீத் அஸீஸ், நொலேஜ் பொக்ஸ் பணிப்பாளர் எஸ். ஏ. அஸ்கர் கான், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஜுனைத் எம். ஹாரீஸ், தர்கா நகர் கல்வியல் கல்லூரி முன்னாள் உப -பீடாதிபதி கலைவாதி கலீல், மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முஹம்மத், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போர பயிற்சி குழு இணைப்பாளர் ஹில்மி மொஹம்மட், டெய்லி சிலோன் செய்தி ஆசிரியர் அஷ்செய்க் எம். எம். முஹிதீன் ஆகியோர் கருத்தரங்கில் விரிவுரைகளை நடத்தினர்.


கஹட்டோவிட்ட அல் - பத்ரியா, கஹட்டோவிட்ட பாலிகா, உடுகொட அரபா, திஹாரிய அல் - அஸ்ஹர், கள்- எளிய அலிகார், அல்லரமுல்ல சாஹிரா, நாம்புளுவ பாபுஸ்ஸலாம், குமாரிமுல்லை முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் உயர்தர மாணவ, மாணவிகளும், பிரதேச அரபுக் கல்லூரி மாணவ,மாணவிகள் என 223 பேர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


விழாவில் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான், சியன ஊடக வட்ட உப - தலைவரும் நவமணி செய்தி ஆசிரியருமான ஸிராஜ் எம். சாஜஹான், சியன மீடியா சேர்க்கில் உப - செயலாளரும் இலங்கை வானொலி செய்தி ஆசிரியருமான பஸ்ஹான் நவாஸ், நவமணி ஆசிரியர் பீட உறுப்பினரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். ஸாகிர், ஸ்ரீலங்கா மீடியா போர செயற்குழு உறுப்பினர்கள், சியன மீடியா சேர்க்கில் நிர்வாகிகள், மாணவர்கள் பெற்றோர்கள்,கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


விழா நிகழ்ச்சிகளை பாஸித் தொகுத்து வழங்கினார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

No comments

Powered by Blogger.