Header Ads



கற்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார் மீது நோன்பு கடமையா?

ஆக்கம்- TSA கல்லூரி மாணவி

வினா: கர்ப்பமான ஒரு பெண் அல்லது பாலூட்டும் தாய் நோன்பு நோற்பது அவசியமா?

விடை:
இவ்விருவர் தொடர்பாகவும் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் பிரயாணியை விட்டும் தொழுகையின் அரைவாசியையும் மேலும் பிரயாணி, கற்பமுற்றவர், பாலூட்டுபவர் ஆகியோரை விட்டும் நோன்பையும் இல்லாமலாக்கியுள்ளான். (ஆதாரம் : முஸ்னத் அஹ்மத், நஸாயி)

இந்த ஹதீஸ் இவ்விருவரும் நோன்பை விடுவதற்கு ஆதாரமாகும். ஆனாலும் இவ்வாறு விட்ட நோன்பை அவர்கள் மீண்டும் கழாச் செய்ய வேண்டுமா? என்பது சம்பந்தமாக இவ்விருவர் விடயத்திலும் எந்தவொரு முடிவும் நபிகளாரைத் தொட்டும்அ றிவிக்கப்படவில்லை.

அதனால் அறிஞர்களில் சிலர் இவ்விருவரும் விட்ட நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
அவர்களின் ஆதாரங்கள் பின்வருமாறு:
அல்லாஹ் கூறுகின்றான் உங்களில் யார் நோயாளியாக அல்லது பிரயாணியாக இருந்தாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு பிடித்துக் கொள்ளட்டும் (சூறா பகறா 184)
பிரயாணி நோன்பை விட்டால் கழாச் செய்ய வேண்டும் என இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதால் பிரயாணியைப் போன்றே கர்ப்பமானவரும், பாலூட்டியும் நோன்பை கழாச் செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஏனென்றால் நோன்பை இவ்விருவரும் விடுவார்கள் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அவ்விருவருடன் பிரயாணியையும் சேர்த்துக் கூறியுள்ளதால் பிரயாணி கழாச் செய்வது அவசியம் என வரும் சட்டத்தை மீண்டும் இவ்விருவருக்கும் வழங்க வேண்டும் என்பது அவர்களின் வாதமாகும்.

இந்த வாதம் தவறானதாகும். ஏனென்றால், நோன்பை விடுகின்ற விடயத்தில் மூவரையும் அந்த ஹதீஸில் சேர்த்துக் கூறப்பட்டது போன்று நோன்பை கழாச் செய்யும் விடயத்தில் பிரயாணியுடன் அவ்விருவரும் மேற் சொன்ன அல்குர்ஆன் வசனத்தில் சேர்த்துக் கூறப்படவில்லை. மாறாக நோயாளியே இங்கு பிரயாணியின் சட்டத்துடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளார்.

எனவே விட்ட நோன்பை கழாச் செய்வது பிரயாணியைப் போன்று நோயாளிக்கு கடமையாகும். ஆனால் இவ்விருவரும் நோயின் காரணமாக நோன்பை விடுபவர்கள் அல்ல. மாறாக வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை கருத்திற் கொண்டும் கையில் தவழும் குழந்தையின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டுமே நோன்பை விடுகின்றனர்.

அதனால் இவ்விருவருக்கும் நோயாளியின் சட்டம் பொருந்தாது. அவ்வாறே பிரயாணியின் சட்டத்தையும் அவர்களுக்கு கொடுக்க முடியாது. இவ்விருவரும் தெளிவாக நோன்பை விடுவார்கள் என்று கூறப்பட்டது போன்று கழாச் செய்வது சம்பந்தமாகவோ, உணவழிப்பது சம்பந்தமாகவோ தெளிவான முடிவு நபிகளாரிடம் இருந்த சொல்லப்படாததால், யூகத்தின் அடிப்பைடயில் அவ்விருவரும் மீண்டும் நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்று ஆதாரமில்லாமல் கூறுவது தவறாகும்.

இன்னும் சில அறஞர்கள் அவ்விருவரும் கழாச் செய்வது அவசியமில்லை. ஒரு நோன்பிற்கு பதிலாக ஒரு ஏழைக்கு ஆகாரமளிப்பது போதுமானதாகும் என்று கூறுகின்றார்கள். இதே கருத்தில் இப்னு அப்பாஸ் (றழி), இப்னு உமர் (றழி) அவர்கள் தீர்ப்பு வழங்கிய செய்தியும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு உணவளிப்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் என்று அவர்கள் குறிப்பிடவுமில்லை. எனவே அது அவர்களின் தனிப்பட்ட முடிவாகும்.

இந்த முடிவு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சூறா பகறா 184ம் வசனத்தில் இருந்து அவர் விளங்கிக் கொண்ட ஒரு தனிப்பட்ட விளக்கமுமாகும்.
அதன் விபரம் பின்வருமாறு :
முன்னர் குறிப்பிட்ட சூறா அல் பகறா 184 வசனத்தின் தொடரில் அல்லாஹ் கூறுகின்றான்.
(அதற்கு சக்தி பெற்றவர்கள் ஒரு மிஸ்கீனுக்கு ஆகாரம் வழங்குவது பரிகாரமாகும்)

இவ்வசனம் நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்த ஒரு சட்டத்தை குறிப்பிடுகின்றது. அதாவது விரும்பியவர் நோன்பு பிடிக்கலாம் அல்லது விரும்பியவர் அதை விட்டு அதற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு ஆகாரம் அளிக்கலாம் என்பதாகும்.
ஆனாலும் இந்த சட்டம் சூறா அல் பகறாவின் 185 வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு அந்த சலுகை இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.
அல்லாஹ் கூறுகின்றான்.
(உங்களிடம் யார் ரமழான் மாதத்தை அடைகிறாரோ அதில் அவர் நோன்பு நோற்கட்டும்)
இந்த வசனம் இறங்கிய போது மேற்சொன்ன சலுகை மாற்றப்பட்டது என்பதை ஸலமத் இப்னு அக்வஃ (றழி) அவர்களும், இப்னு உமர் (றழி) அவர்களும் மற்றும் பல ஸஹாபாக்களும் கூறுகின்றார்கள். அவற்றை புஹாரிக் கிரந்தத்தில் காணலாம்.

அதாவது நோன்பு பிடிக்க சக்தி பெற்ற அனைவரும் நோன்புதான் பிடிக்க வேண்டும். அதற்குப் பதிலாக ஆகாரம் வழங்குவது செல்லுபடியற்றதாகும் என அல்லாஹ் இவ் வசனத்தில் சட்டமாக்கியுள்ளான்.
என்றாலும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மட்டும் இவர்கள் அனைவரின் கருத்துக்கு மாற்றமாக நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போன்று தனிப்பட்ட ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார்கள்:

அவரின் கருத்தாவது:
விரும்பியவர் நோன்பை விட்டு விட்டு உணவளிக்கலாம் என்ற சட்டம் மொத்தமாக மாற்றப்படவில்லை. மாறாக வயதான ஆண் பெண் நோன்பை விட்டு உணவளிப்பர். அவ்வாறே கர்பிணித்தாயும், பாலூட்டும் தாயும் நடந்து கொள்வார்கள்.
இம்மூவர் விடயத்திலும் ஆரம்ப காலத்தில் இருந்த அதே சட்டம் தொடர்ந்து இருக்கும் என்பது அவர்களின் கருத்தாகும். இக்கருத்து அவரின் தனிப்பட்ட விளக்கமாகும். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் அவர் எந்த செய்தியையும் முன்வைக்கவில்லை.

இன்னும் இவ்வசனம் இறங்குகின்ற போது இப்னு அப்பாஸ் (றழி) சிறு பிள்ளையாக இருந்தார்கள். இவ்வசனம் இறங்கிய போது சட்டத்தை நடைமுறைப்படுத்திய மூத்த ஸஹாபாக்கள் அவருக்கு மாற்றமாக தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதாவது விரும்பியவர் நோன்பை விடலாம், அதற்குப் பதிலாக உணவளிக்கலாம். என்ற சட்டம் மொத்தமாக மாற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அல்குர்ஆன் வசனங்கள். நபி மொழிகளிலிருந்தும் சிந்தித்து ஆய்வுகளின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குவது என்பது அவரின் வழக்கமாகும். அதனால் அது அவரின் ஒரு தனிப்பட்ட கருத்தாகக் கொள்ளப்படும்.
எனவே பாலூட்டியும், கர்ப்பிணியும் நோன்பை விட்டால் கழா செய்ய வேண்டும் என்பதற்கோ உணவளிக்க வேண்டும் என்பதற்கோ நேரடியாக அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் இல்லை.
அதனால் அல்லாஹ் கடமையாக்காததை ஆதாரமின்றி கடமையாக்கக் கூடாது. 

இதே வேளை ஒருவர் பேனுதல் கருதி அந்த நோன்பை கழாச் செய்தாலோ அல்லது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் தீர்ப்புப்படி ஒரு ஏழைக்கு உணவளித்தாலோ அது அவரின் சொந்த விருப்பமாகும்.

இதே வேளை இன்னொரு விடயத்தை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு பெண் கர்ப்பமானதிலிருந்து இரண்டு வருடம் பாலூட்டும் வரை மூன்று றமழான் மாதத்தின் நோன்ப விடுகிறாள். மூன்று வருடத்தின் பின் மீண்டும் அவள் கர்ப்பமானால் மீண்டும் மூன்று வருட றமழான் மாத நோன்பை விடுவாள். இவ்வாறே சிலர் ஐந்து பிள்ளைகளை இன்னும் சிலர் பத்துப் பிள்ளைகளை தொடர்ச்சியாக பெற்றெடுத்து வளர்ப்பதை அவதானிக்கலாம்.

விட்ட நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்று நேரடி ஆதாரம் இல்லாமல் நாம் கமையாக்கும் போது அது எவ்வளவு பெரிய சுமையாகவும், பாரமாகவும் அமைந்து விடும் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஐந்து பிள்ளைக்குரியவர் 15 ரமழான் மாதங்களின் நோன்பை பிடிக்க வேண்டிய சுமை, பத்து பிள்ளைக்குரியவர் 30 ரமழான் மாத நோன்பை பிடிக்க வேண்டிய சுமை.
இவ்வாறான கடைமையை இவர்கள் மீது தெளிவான ஆதாரம் இல்லாமல் சுமத்தாட்டும் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.