Header Adsஇலங்கை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஹர்த்தால் சாதிக்கப்போவது என்ன?சமூகப் பற்றாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற காவி பயங்கரவாதத்திற்கு எதிரான புதன்கிழமை(24.05.2017) ஹர்தாலின் பின்னணியில் முஸ்லிம்கள் சாதிக்கப்போவது என்ன என்பது பற்றிய பூரணத்துவமற்ற தன்மைகள் காணப்படுகிறன. முஸ்லிம்களைப் பொறுத்தளவில், நாடு முழுவதிலும் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக கிழக்கில் தனித்துவமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். 

நாடு முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கின்ற நிலைமையில் முஸ்லிம்கள் இல்லை. இன்று பொதுபலசேனாவின் ஞானசாரரின் நடவடிக்கைகள் மாத்திரமன்றி, சில காடைத்தனமிக்கவர்களின் மிலேச்சத்தனமிக்க செயற்பாடுகள் கடும் ஆத்திரத்தை ஊட்டிவருகின்றமை உண்மைதான். இது முஸ்லிம்கள் இளைஞர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் கடும்விசனத்தை ஏற்படுத்திவருகின்றது. 

காவிக்குள் ஒழுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற ஒருசில பயங்கரவாதிகள் இன்று நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் போன்றவற்றிற்கு நாசத்தை உண்டுபண்ணுவதாகக் கூறினாலும், இதன் பின்னணியில் பாரியதொரு சதிமுயற்சி நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளும் காணப்படலாம். முஸ்லிம்களை தூண்டிவிட்டு மொத்தமாக கலவர உணர்வை பேரினவாதிகள் மத்தியில் விதைத்து, மதநிந்தனையை தோற்றுவிப்பதற்கும் இவ்வாறான செயற்பாடுகள் கால்கோளாக அமையலாம்.

பொதுவாக முஸ்லிம்களைப் பொறுத்தளவில் இறைவனின் நாட்டம் எதுவோ அதுதான் நடைபெறும் என்பதை நம்பியவர்கள். முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும், வணக்கஸ்தலங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினால் மக்கள் கொதிப்படைவார்கள். இதனைப் பயன்படுத்தி ஞானசாரர் போன்றோர்கள் கூறுவதுபோல இலங்கைவாழ் முஸ்லிம்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கி நாட்டைவிட்டே துரத்துவதற்கான ஒரு சதித்திட்டத்தின் அடிப்படையிலான ஏவல்களை மேற்கொள்ளலாம்.

ஆனால் இங்கு கூறப்படுகின்ற சமூகப்பற்றாளர்கள் என்கிற முகவரியற்றவர்களின் பின்புலம் தெரியாமல் இலங்கை முஸ்லிம்கள் ஹர்த்தால் என்கிறபேரில் கடையடைப்பினை அல்லது பாடசாலைகளை மூடிவிடுவதால் பெரும்பான்மையினராக வாழ்கின்ற சிங்கள, தமிழ் சகோதர்களுக்கு அது சிலவேளைகளில் எவ்விதமானதொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்பதும் நாம் அறிந்ததே.

இதேவேளை இவ்வாறு ஹர்த்தால் மேற்கொள்வதானது, சிங்களப் பிரதேசங்களில் அதாவது, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களைப்போல இரண்டு மடங்குக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வாழ்வியலையும் இந்த சமூகப்பற்றாளர்கள் சிந்திக்க வேண்டியதும் அவசியமாகும். 

வெறுமனே ஹர்த்தால் மேற்கொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பினை மாத்திரம் வழங்கிவிட்டு, முஸ்லிம்கள் எதிர்ப்புக் காண்பிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்டால் 1915ம் ஆண்டில் ஏற்பட்ட, பல ஆயிரக்கணக்கான கம்பளை நகரில் மாத்திரமன்றி நாட்டின் நாலாபுறங்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், கொல்லப்படுவதற்கும் காரணமாக அமைந்திருந்த நிகழ்வாகும்.

அன்றைய நிகழ்வின் நூறு வருடப் பூர்த்தியை கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளை கடந்தகாலங்களில் முயற்சித்த போதிலும், பேரினவாதிகளின் போர்க்குண வியூபங்கள் இன்று நிறைவேறுவதற்கு சாதகமானதாக அமையலாம். இதற்கு நாம் ஒருநாளும் துணைபோகக் கூடாது.

எனவே, இன்று முஸ்லிம் அரசியல்;வாதிகள், முஸ்லிம் அமைச்சர்கள் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் இருக்கின்றனர். நல்லாட்சியின் அரசுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை உடன் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை இவர்கள் ஏற்படுத்துதல் வேண்டும். இலங்கையில் வாழும் முஸ்;லிம்கள் மத்தியில் மேற்கொண்டுவருகின்ற பேரினவாதத்ததை; தூண்டும் அடிமைத்தனமிக்க போக்குகள், கடுமையான சொற்போர்கள், மதசிந்தனைகள், முஸ்லிம்களை அவமானப்படுத்துகின்ற கருத்தாடல்கள் ஒழிக்கப்படுவதற்கு நல்லாட்சியின் ஆட்சியாளர்கள் ஊடாகவே கருத்துக்களை முன்வைத்து தீர்வுகள் காணப்படுதல் அவசியமாகும். இதனை விட்டுவிட்டு முழுமையானதொரு ஹர்த்தால் மேற்கொள்வதால் குறிப்பாக ஹர்த்தாலை மேற்கொள்கின்ற முஸ்லிம்களின் பாதுகாப்பு, அவர்களின் வாழ்வியலின் நிரந்தரம், சிங்கள சகோதர்களோடு பூண்டுள்ள உறவுகள் போன்றன பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.

அம்பாரை இறக்காமத்தில் புத்தர்சிலை நிறுவல், வில்பத்துப் பிரச்சினை, கொழும்பு, குருநாகல், மகரகம, இன்று அம்பாரை போன்ற பல இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கு ஹர்த்தால் மாத்திரம் முழுமையானதொரு தீர்வினை தராது என்பது எமது அபிப்பிரயமாகும்.


நாட்டின் பாதுகாப்புத்துறைக்கும் சவால்விடுக்குக்கும் அளவுக்கு கட்டுமீறியதான நிலைமை ஒருசில ஞானசாரர்களின் காவிக்குள் ஒழிந்துகொண்டிருக்கும் அடித்தளமிடுமிகளை அரசு கண்டறிய வேண்டியது அவசியமானதாகும். அந்தக் கண்டிபிடிகளை முதலில் இனங்கண்டு அவர்களுக்கு எதிரான தண்டனைகள் வழங்கப்படுகின்றபோதுதான் முஸ்லிம்கள் மாத்திரமன்றி நாட்டில் தமிழ்பேசும் சிறுபான்மையினர்களின் இருப்பும் ஸ்திரமானதாக அமையும். 

நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களிடையே முதலில் ஒற்றுமை ஏற்படுவதற்கான அனைத்துவழிகளும் ஒழுங்கமைக்கப்படுவதுடன், சகவாழ்வில் பேரினவாதத்தை முறியடிக்கும் சிங்கள சகோதர்களையும் இவர்களுக்கு எதிராக திசைதிருப்பும் அளவுக்கு முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். 

ஆனால் பெரும்பான்மையினரின் ஒத்துழைப்பின்றி முஸ்லிம்களுக்கு எதிரான குறித்த சிலர்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பலிக்கடாவாக்க முனைவதைத் தவிர்க்க வேண்டிய இன்றைய நாட்களில் அவசியமானதொன்றாகும்.

மேலும், எதிர்வரும் நாட்களில் முஸ்லிம்களின்; புனித நோன்பு ஆரம்பமாகின்றது. இறைவனின் அருள் பொழிகின்ற மாதம். நல்லமல்கள் செய்கின்ற மாதம். முஸ்லிம்களின் இருப்புக்கும், வாழ்வியலை சீரழிக்க நினைக்கின்ற இத்தகைய காவிகளின் அடக்குமுறைகளுக்கும், அடாவடித்தனங்களுக்குமான இறைதண்டனையை வேண்டி தினமும் ஒவ்வொரு தொழுகையிலும் இறைவனிடம் வேண்டுதல் உசிதமானதாக இருக்கும். 

இதனையெல்லாம் ஒருபுறம் இருக்கச்செய்துவிட்டு ஆத்திரத்தில் அவசரப்பட்டு, உலமாக்கள், பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என்கிறவர்களின் ஆதரவுகள் இன்றிய ஒரு முகப்படுத்தப்படாத நிலையில் நமது இளைஞர்கள், அல்லது குறித்த ஒரு குழுவினர் இவ்வாறான நாடுதழுவியரீதியில் மேற்கொள்ளப்பட முயற்சிக்கின்ற ஹர்த்தாலைத் தவிர்ப்பது நலவாய் அமையலாம்.

ஆதலால்தான் இது முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளை மேலும் வியாபிக்கச் செய்யலாம் என்பது எமது அபிப்பிராயமாகும். சிந்திப்போம், நமது ஆட்சியாளர்களைக் கொண்டு சதிகாரர்களை இனங்காணச் செய்வதற்கு உந்துதலை கொடுப்போம். வாக்களித்து சுகபோகம் அனுபவிக்கும் தலைவர்களை ஆட்சியின் உச்சர்களிடம் சென்று நியாயத்தை வேண்டும்படியாக அனுப்புவதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் உச்சபட்ச கோரிக்கையினை முன்வைப்போம்.

முஸ்லிம்கள் இன்றைய காலகட்டத்தில் மிகமிக பொறுமையுடனும், அவதானத்துடனும், நின்று நிதானித்துப் பயனிப்போம். இறைவனிடம் அனுதினமும் இருகரம் ஏந்தி துஆச் செய்வோம். முஸ்லிம்களையும், இறைவனின் ஆலயத்தையும் நாசம் செய்யவதற்கும், தூண்டுகின்றவர்களையும், தூண்டப்படுகின்றவர்களையும் அழித்துவிடு என்று துஆச் செய்வோம். பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் நிதானமாக நடந்து கொள்வோம்.


அட்டாளைச்சேனை மன்சூர்

No comments

Powered by Blogger.